Thursday 10 May 2018

தேங்காய்ப்பால் குழம்பு

 எங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகை புரியும் போது அனேகமாக‌ தேங்காய்ப்பால் குழம்பும் மட்டன் கறியும் சமைப்பது என் வழக்கம்.

வருகை தரும் விருந்தினரும் தேங்காய்ப் பால் குழம்பு சூப்பர். எப்படி வைக்கனும்னு குறிப்பு கேட்கும் வழக்கமும் உண்டு.

சரி இதையே ஒரு பதிவாகப்போடலாமேன்னு  மனதில் ஒரு எண்ணம்.

முதலில் இதைக் கற்றுத் தந்தது என்னோட‌ பாட்டியம்மா. அவங்க‌ சூப்பரா சமைப்பாங்கன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். இது சிலோன் ஸ்டைல். தாத்தா சிலோன்ல‌ இருக்கும்போது கத்துகிட்டு பாட்டிம்மாவுக்கு சொல்லிக் கொடுத்த‌ ரெசிபி.

எங்க‌ வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த‌ குழம்பு. இதற்கு அசைவம் தான் பொருத்தமாக‌ இருக்கும் என்பதையும் முதல்லேயே சொல்லிக்கறேன்.

சரி இப்போ குழம்பு  செய்ய‌ தயாராகலாம்.

முதலில் ஒரு மூடி தேங்காயை மிக்சியில் அரைத்து வடிகட்டி முக்கால் டம்ளர் அளவில் கெட்டியாக‌ பால் எடுங்கள். இது முதல் பால்.

மீண்டும் த‌ண்ணீர் சேர்த்து வடிகட்டி முக்கால் டம்ளர் அளவு இரண்டாம் பால் எடுக்கவும்.

அதுபோலவே மீண்டும் மூன்றாம் பால் எடுத்து அதிலே, ஒரு விரல் அளவு  அதாவது, நெல்லிக்காய் அளவு புளியை ஊறவிடவும். தேங்காய் சக்கையை தூர‌ எறிந்து விடுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து அதில் இரண்டு சின்ன‌ வெங்காயத்தை வெட்டிப் போட்டு வதக்கவும்.

 அது வதங்கியதும்  ஒரு பச்சை மிளகாய், சிறு துண்டு இஞ்சி இவற்றை நசுக்கிப் போடவும்.

அதில், ஊறவைத்திருந்த‌ புளியை கரைத்து  விடவும்.  புளிக்கரைசல்  ஒரு நிமிடம் கொதிக்கட்டும்.

பின்பு, இரண்டாம் பாலை ஊற்றவும். அதுவும் கொதி வந்தவுடன் ஞாபகமாக‌ அடுப்பை அணைத்து விட்டு முதலில் எடுத்த‌ கெட்டியான‌ பாலை விடவும்.

உப்பு போட்டு கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.

சுவையான‌, எளிய‌ செய்முறையுடன் கூடிய‌ தேங்காய்ப் பால் குழம்பு ரெடி.



பின்குறிப்பு;

                கெட்டியான‌ முதல் பாலை விட்டபின் குழம்பு கொதிக்கக்       கூடாது. கொதித்தால் குழம்பு திரிந்துவிடும்.       

   
இந்தக் குழம்பு காரம் இல்லாமல் குழந்தைகள் விரும்பும் வண்ணம் இருக்கும்.

தேங்காய்ப் பால் வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்து.

இந்த‌ அளவு நான்கு பேருக்குப் போதுமானது.

 இந்தப்பதிவைக்  கேட்ட அனிதா, ஆனந்தி, கார்த்தியாயினி ஆகியவர்களுக்காக வழங்குகிறேன்.