Saturday 21 July 2018

அன்னப்பறவை

வாழ்க்கைப் பயணம் மலர்ப்பாதை அல்ல‌. கல்லும் முள்ளும் நிறைந்தது தான்.

அதைப் புரிந்து மனமாற‌ ஏற்றுக்கொண்டு நாம் தான் கவனமாக‌  நடக்கப் பழகவேண்டும். அதையும் சந்தோஷமாகவே  செய்ய‌ வேண்டும்.

கசப்புகள் வாழ்க்கையில் வரும் போகும். அதை நாம் தாண்டிச் செல்ல‌ வேண்டும்.

நல்லதைப் பேசுங்கள். நல்லதையே சிந்தியுங்கள்.

நீ எதை நினைக்கிறாயோ; அதுவாகவே நீ ஆகிறாய்.
இதுவே அஹம் பிரம்மாஸ்மி. தத்வமசி.

எதிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும்.  அன்னப்பறவை போல‌ நல்லதை மட்டும் பிரித்தறிய‌ உணர‌ வேண்டும்.



நம் நாட்டில் 99 சதவீதம் நல்லவங்க‌ தான். ஊடகங்கள் ஒரு சதவீத‌ கெட்டதைத் தான் செய்தியாகக் காட்டும்.

சல்லடை நல்ல‌ பொருளை கீழே விட்டுவிட்டு  வேண்டாத‌ பொருளை தன்னிடம் தக்க‌ வைத்துக் கொள்ளும். அப்படி இருக்கக் கூடாது.

என்றோ ஒரு நாள் உன் அம்மா, அப்பா, கணவன், மணைவி கோபத்தில் சொன்ன‌ ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு  நல்லவற்றை மறந்து விடுவது என்ன‌ நியாயம்?

பழங்கணக்கு பார்க்காதே. நீங்கள் நன்றாக‌ வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் ,இந்த‌ உலகிலேயே அவர்கள் மட்டும்  தான்.

சர்வம் அன்பு மயம்.

வாழ்க‌  அன்புடன்.:))

மௌனமொழி

மௌனம் அது ஒரு மொழி.  அதற்கு பல‌ அர்த்தம் உண்டு.

குழந்தைக்கு  மௌனத்தை ரசிக்க‌ பழக்குவோம். செடி, மரம், பறவையை  உற்று  நோக்கச் சொல்லுங்கள்.

 பஞ்சுப்பொதி போன்ற‌ மேகத்தை, அதிலே தோன்றும் கற்பனை உருவங்களை கவனிக்க‌ கற்றுக் கொடுங்கள்.

எறும்புகளின் வரிசையை, சுறுசுறுப்பைப் பற்றி வியந்து  பாராட்டிப் புரிய‌ வையுங்கள்.

பெரிய‌ பெரிய‌ கட்டிடங்களை மட்டும் தான் அண்ணாந்து பார்த்து ரசிக்க‌ வேண்டுமா?



ஆறு , கடல், காடு  இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அவற்றை கண்டு களிக்க‌ பழக்குங்கள். பார்த்து  புரிந்து கொள்ளட்டும் இயற்கையின் அற்புதத்தை.

இயற்கையை ரசிக்க‌ இசைந்து வாழ‌ பழக்குங்கள்.

  இதுவும் ஒருவித‌ கல்வியே.

Friday 20 July 2018

விலைமதிப்பற்ற‌ நேரம்

என் தோழி சுதா  தன் மூன்று வயது குழந்தை அனுவோடு வர‌ நானும் சேர்ந்து கோவிலுக்குச் சென்றோம்.

மாலை ஏழு மணி. நாங்கள் செல்லும் போது
 குழந்தை அனு," அம்மா, நிலா ஏன் என்கூடவே வருதும்மா" என்று மழலையில்  கேட்டாள்.

நானும் சட்டென‌," நிலாவுக்கு அனுக்குட்டியை ரொம்ப‌   பிடிச்சிருக்கு. அதனால் தான் " என்று சிரித்தேன்.

குழந்தை சமாதானம்   அடைந்தாலும் என் தோழி விடவில்லை. குழந்தைக்கு புரியும்வண்ணம் உண்மையான‌ காரணத்தை மிக‌ எளிமையாகக் கூறினாள்.

அப்போது நான் கற்றுக் கொண்டேன். குழந்தைகளின் கேள்விக்கு சரியான‌ பதிலை அளிக்க‌ வேண்டும் என்பதை.



குழந்தை கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்துங்கள். பதில் தெரியலேன்னா கூட‌, குழந்தை உயரத்துக்கு குனிந்து," நாம‌ சேர்ந்து பதிலைத் தேடலாம்'' என்று கூறி குழந்தையோடு குழந்தையாக‌ மாறுங்கள்.

இன்னொரு அம்மாவிடம்    குழந்தை ஒரு செடியைக் காட்டி, கேள்விகளை தொடர்ந்து அடுக்க‌  சிறிது நேரம் பதிலளித்த  பின், " சும்மா தொண‌ தொணன்னு கேள்வி கேட்காதே" ட்யூஷனுக்குப் போ" என்று விரட்டியதையும் கவனித்தேன்.

இன்று குழந்தையின் கேள்விக்கு பதிலளிக்க‌ எரிச்சல்பட்டால் நாளை, வளர்ந்தபின் அதே குழந்தையிடம்," ஏன் லேட்" என்று நீங்கள் கேட்கும் போது," சும்மா  கேள்வி கேட்காதீங்கம்மா" என்று பதில் வரும்.

குழந்தைகட்கு விலையுயர்ந்த‌ பொருளை வாங்கிக் கொடுப்பதை விட‌ முக்கியமானது உங்கள் பொன்னான‌ நேரத்தை அவனோடு செலவிடுவது தான். அதையே குழந்தைகளும் விரும்புவர்.

சாப்பாடு ஊட்டும் போது டிவி காட்டாமல் கதை கூறுங்கள். என் குழந்தைகட்கு தினம் ஒரு கதை கூற‌ வேண்டும்.  ஒருமுறை சொன்ன‌ கதையை மீண்டும் கூற‌ இயலாது. புதிய‌ கதைக்காகவே நான் கதைகள் படிக்க‌ ஆரம்பித்தேன்.

குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். விளையாடுங்கள். அளவளாவுங்கள். அவை தரம் வாய்ந்ததாக‌ இருக்கட்டும். அவையே உங்கள் வாழ்வில் விலை மதிப்பற்றதாக‌ அமையட்டும். 




இனிய இல்லம்

குழந்தை வளர‌ நல்ல‌ வீட்டுச் சூழலை ஏற்படுத்துங்கள்.

நல்ல‌ விஷயத்தை    மனைவியிடம் பார்த்தால் குழந்தை முன் மனைவியைப் பாராட்டுங்கள். ஆதுபோலவே மனைவியும்  கணவனை உயர்வாகக் கூற‌ வேண்டும்.

அதை விடுத்து, குழந்தை முன் அம்மாவை," உனக்கு அறிவே கிடையாது" என்று கூறினால் அதே வார்த்தையை குழந்தை தன் இருபது வயதில் கூறுவான். 

உங்கள் கணவரிடம்  உள்ள‌ நல்ல‌ குணத்தை பாராட்டுங்கள். "தாத்தாவும், பாட்டியும் அப்பாவை நல்லா வளர்த்திருக்காங்க‌" என்று குழந்தையிடம் பெருமையாகக் கூறுங்கள்.

குழந்தையும் பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்வான்.

குழந்தை தப்பு செய்தால் கண்டியுங்கள். தண்டனை தேவையெனில் 
 த‌ண்டியுங்கள்.

குழந்தை தடுக்கி கீழே விழுந்தால் தரையை அடிப்பதை விட்டுவிட்டு 
"பார்த்து கவனமா  நடக்கனும்" என்று அறிவுறுத்துங்கள்.

குழந்தை தடுக்கி விழுந்தால் தரை என்ன‌ செய்யும்?
நாளை, குழந்தை தவறு செய்தால் அடுத்தவரை திட்டுவது நியாயமா?




குட்டிக் கதை

ஒரு காட்டில் இரு கிளிகள் ஒன்றாக‌ வசித்தன‌. வேடன் ஒருவன் அவற்றைப் பிடித்து ஒன்றை முனிவர் ஒருவரிடமும் , மற்றதை கசாப்புக் கடைக்காரரிடமும் கொடுத்து விட்டான்.

முனிவர் வீட்டில் வளர்ந்த‌ கிளி, "வாங்க‌. உட்காருங்க‌" என்று அன்பாக‌ உபசரிக்கக் கற்றுக் கொண்டது.

கசாப்புக்கடைக்காரர் வீட்டில் வளர்ந்த‌ கிளி," வெட்டு, குத்து" என்ற‌ சொற்களைப் பேசக் கற்றுக் கொண்டது.

ஆம். வளரும் சூழலைப் பொறுத்து அவர்கள் சுபாவம் அமையும்.




 இன்னொரு விஷயம்

'அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? ' இதென்ன‌ தப்பான‌ கேள்வி?

குழந்தை அம்மாவிடம் வந்து,"அம்மா, எனக்கு யாரைப் பிடிக்கும். அம்மாவையா அல்லது அப்பாவையா?" என்று கேட்டால்

" அப்பாவைப் பிடிக்கும். எனக்கும் அப்பாவைப் பிடிக்கும். உனக்கும் அப்பாவைப் பிடிக்கும்" என்று அம்மா கூற‌ வேண்டும்.

அதுபோலவே அப்பாவும்," எனக்கும் அம்மாவைப் பிடிக்கும். உனக்கும் அம்மாவைப் பிடிக்கும்" என்று கூற‌ வேண்டும்.

 அத்தகைய‌  அன்பான‌ சூழல் நிலவும் குடும்பமே நல்லதொரு குடும்பம். உங்கள் இல்லம் இனிய‌ இல்லமாக‌ அமைய‌ வாழ்த்துக்கள்.



Thursday 19 July 2018

உற‌வுகளின் உன்னதம்

 குழந்தைகள் உங்களது கண்ணாடி. நீங்கள் எவ்வழியோ அவர்களும் அவ்வழி.

நீங்கள் உறவுகளை உயர்வாகப் பேசி அறிமுகப்படுத்தினால் தான்  அந்த‌ உறவுகளை குழந்தையும் மதிக்கும். உறவும் நீடிக்கும்.

ஒவ்வொருவரையும் பெருமையாகப் பேசி அறிமுகம் செய்யுங்கள். கீழ்த்தரமாகப் பேசி குழந்தைகட்கு அறிமுகம் செய்யாதீர்கள்.



ஒரு குட்டிக் கதை கேட்கலாமா?

ஒரு பனிப்பிரதேசத்தில் நிறைய‌ முள்ளம்பன்றிகள்  வசித்தன‌. அது கடுமையான‌ குளிர் காலம். பனிக்கொடுமை தாங்க‌ இயலவில்லை.

அவை ஒன்றோடொன்று நெருங்கி நின்றால்   கதகதப்பாக‌ உணர்ந்தன‌. ஆனால், நெருங்கினால் முட்கள் குத்தின‌. சிராய்ப்புகள் ஏற்பட்டன‌.

விலகினால் குளிர் தாளாமல் மடிந்து விழுந்தன‌. 

நெருங்கி நின்றால் முள் குத்தினாலும், பனிக்கொடுமை இல்லை. ஒரு இதமான‌ சூடு கிடைத்தது.

இப்படித் தான் உறவுகளும்,

அதிகமா நெருங்கினால் சிறு சிறு சலசலப்புகள் வரும். அதற்குப் பயந்து உறவுகளே வேண்டாம் என்றால் தனிமை ; அது பனிக்கால‌ கொடுமையைப் போல‌.

தனிமையை விட‌ சிராய்ப்பு பரவாயில்லை.

கீறல், சிராய்ப்புகள் சகஜம் தான். இதமான‌ அன்பு அதைவிடப் பெரியது.

முள்ளைப் பார்க்காமல், கதகதப்பான‌ அன்பைக் காண‌ கண்கள் பழக‌ வேண்டும்.

உறவுகள் கூட‌ இருந்தால் ஒரு மனோதைரியம்
தனியே இருந்தால் ஒரு மனச்சோர்வு.
எல்லோரும் என்கூட‌ இருக்காங்க‌ என்று நினைப்பதே ஆனந்தம் தருமே.

உறவுகளிடையே விமர்சனங்கள் வரத்தான் செய்யும். முள்ளைப் போல‌.
குளிர்கால‌ நெருப்பு போல‌  அதிகம் நெருங்காமலும் அதிகம் விலகாமலும் அளவோடு வாழப் பழக‌ வேண்டும்.

உறவுகள் உன்னதமானவை என்பதை குழந்தைகட்கும் புரிய‌ வைக்க‌ வேண்டும். அவர்களை உயர்வாகப் பேசி அறிமுகப் படுத்துங்கள்.





போராடுவதே சுவாரஸ்யம்

க‌ஷ்டப்படாமல் உலகத்தில் எதையும் பெற‌ முடியாது. கேட்டதும் எல்லாமே கிடைத்தால் வாழ்க்கையில் என்ன‌ சுவாரஸ்யம் இருக்க‌ முடியும். போராடிப் பெறுவதே பேரின்பம்.

தான் பட்ட‌ கஷ்டம் தன் குழந்தை படக்கூடாது என்று நினைப்பது பாசம். தான் பட்ட‌ கஷ்டம் தன் பிள்ளைக்கு தெரியவே கூடாதென‌ நினைப்பது தவறு.

என் மாமியார் அவங்களுக்கு மணமான‌ புதிதில் பட்ட‌ கஷ்டங்களையும்,  பின் படிபடியாக‌ முன்னேறியதையும் எனக்குத் திருமணமான‌ புதிதில் என்னிடம் கூறினார்.
அது எனக்கு அவர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.

அம்மா அப்பா அவங்க‌ பட்ட‌ கஷ்டங்களைப் பிள்ளைகளிடம் எடுத்துரைக்க‌ வேண்டும்.

கஷ்டங்கள் மன‌ உறுதியைத் தரும் வல்லமை படைத்தவை. 
தங்கம் அடிவாங்கும். வைரம் பட்டை தீட்டப்படும். சிற்பி செதுக்கினால் தான் சிலை உருவாகும். மரம்  வளர‌ பாறையைத் துளைத்து வேர்விடனும்.



ஒரு குட்டிக் கதை

பக்கத்து வீட்டுக்காரங்க‌ இரண்டு பேர் ஆளுக்கொரு மரம் வளர்த்தார்கள். ஒருவர் அளவான‌ நீரூற்றி நிதானமாக‌ வளர்த்து வந்தார்.  மற்றவர்   ஏராளமாக  நீரும் உரமும் போட்டு விரைவாக‌ உயரமாக‌ வளர்க்கலானார்,

ஒரு  நாள் பலத்த‌ காற்றும் மழையும் அடித்தது. உயரமாக‌ வளர்க்கப்பட்ட‌ மரம் வேரோடி சாய்ந்தது.  அளவான‌ நீரூற்றி வளர்க்கப்பட்ட‌ மரமோ புயலையும் எதிர்த்து தாக்குப் பிடித்து நின்றது.

ஆம். உயரமான‌ மரத்துக்கு எல்லாமே தானே கிடைத்தது. அடுத்ததோ நீருக்கான‌ தேடலில்  தன் வேரை மண்ணில் ஆழப் பரப்பி  வலுவாக‌ காலூன்றியது. 

போராட்டங்களுக்கு நடுவில் வாழ்வதே உரமான‌ வாழ்வு.

திகட்டத் திகட்ட‌ எல்லாம் கொடுத்தால் குழந்தைகட்கு தித்திப்பு என்றால் என்னவென்றே தெரியாது.

கேட்டதும் எல்லாமே கிடைப்பதில் என்ன‌ சுவாரஸ்யம் இருக்க‌ முடியும். போராடிப் பெறுவதிலே தான்  பேரின்பம் இருக்கு. இதை குழந்தைகளுக்கு புரிய‌ வைக்க‌ வேண்டியது பெற்றோரின் கடமை.





Wednesday 18 July 2018

அன்பும் செல்லமும்

அன்பு செலுத்த‌ அம்மா
கண்டிப்பு காட்ட‌ அப்பா

 குழந்தைகள் தவறு செய்தால் கண்டிச்சு வளர்க்க‌ வேண்டும். 

அந்தக் காலத்தில் வீட்டில் நாலைந்து குழந்தைகள் இருப்பார்கள். பெரிய‌ குழந்தையே சின்னதைக் கவனித்துக் கொள்ளும்.

இப்போ அனைவரது வீட்டிலும் ஒன்று, அல்லது இரண்டு குழந்தைகள்   தான். அவர்கள் அதீத‌ செல்லத்துடன்  வளர்க்கப்படுகிறார்கள்.

அதனால் வளர்ந்த‌ பின் சிறு ஏமாற்றங்களைக் கூட‌ தாங்க‌ முடியாதவர்களாக‌ ஆகி விடுகின்றார்கள்.

"அத்தை  பையன் நிறைய‌ மார்க் வாங்கிட்டான் . நீ தான் கம்மி" இப்படி அந்தக் காலத்தில் யாரும் சொல்லல‌.

நூற்றுக்கு நூறு மார்க் வாங்கறதை விட‌ நல்ல‌ மனிதனாக‌ வளர்வதே முக்கியம்.


குழந்தை கேட்ட எல்லாவற்றையும் உடனே கொடுக்கனும்னு அவசியமில்லை. ஒரு வாரம் கழித்து தரேன்னு சொல்லலாம். காத்திருக்கப் பழகட்டும். ஏமாற்றங்களையும் தாங்கும் சக்தி வரனும்.






அன்பு வேறு.
செல்லம் வேறு.
இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

அன்பு கண்டிக்கும்.
செல்லம் கண்டிக்க‌ பயப்படும்.

அன்பு தப்பை தப்புனு சொல்லும்
செல்லம்   கோழைத்தனமானது.

அன்பு அரவணைக்கும்.
செல்லம் குழந்தைங்க‌ சீறினா ஆடிப் போவாங்க‌.

அன்பு தேவையானதைத் தரும்.
செல்லம் கேட்ட‌ எல்லாவற்றையுமே தரும்.

 அம்மா அன்பு தான் கொடுப்பாள்.
அப்பா தான் கண்டிப்பையும் கொடுக்கனும்.
அப்பா கண்டிச்சா அம்மா குறுக்கே வராதீங்க‌.


 சாலையில் பள்ளம் இருந்தால் அம்மா குழந்தையை கையில் துக்கிக் கொள்ளவே விரும்புவாள்.

அப்பா தான் "பார்த்து நடந்து வா" என்று சொல்லிவிட்டு செல்வார்.

குழந்தை தடுமாறி விழுந்தால் அம்மா ஓடிப் போய் தூக்குவாள்.
அப்பாவோ" அதெல்லாம் ஒண்ணுமில்ல‌. எழும்பி வா" என்று ஊக்கம் கொடுப்பார்.

சாலையை நாம் சரிசெய்ய‌ இயலாது. சாலை எப்படி இருப்பினும் கவனமாக‌ நடக்கக் கற்றுக் கொள்ள‌ வேண்டும். அதுவே வாழ்க்கை.