Tuesday 10 July 2018

புத்தகம் எனும் தோழி

 முதலில் புத்தகங்கள் படிப்பது குறித்து சொல்றேன்.

எங்க‌  வீட்டில் அப்பா எனக்கு லைப்ரரியில் இருந்து புத்தகம் எடுத்து வந்து  தருவாங்க‌.  மு.வ‌. மற்றும் ஜெயகாந்தன் எழுதிய‌ புத்தகங்கள்  இவையே அப்பா எடுத்துட்டு வந்து தந்திருக்காங்க‌.

 புத்தகங்களைப்  படித்த‌ பின் அந்த‌ எழுத்தாளர்களின் படைப்பாற்றலைப் பற்றி அழகா எடுத்து சொல்லுவாங்க‌. 

அப்பாகிட்ட‌ பேசவே  நானும் என் தம்பி  தங்கையும் பயப்படுவோம். ஆனால், புத்தகங்கள் குறித்து அப்பா பேசும் போது திறந்த‌ வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்பாவிடம் விவாதிக்க‌ பயம்.

அப்போது வீட்டில் துக்ளக்  வார‌ இதழ் வாங்குவோம். நாட்டு ந‌டப்பு பற்றியும் அரசியல் பற்றியும் அப்பா பேசுவார்கள்.

 ராமகிருஷ்ண‌ விஜயம் மாத‌ இதழும் படிக்கும் வழக்கம் இருந்ததால்  தியானம் யோகா இவற்றிலும் ஈடுபாடு வந்தது.

திருமணத்துக்கு முன்னர் அப்பா ஏற்படுத்திய‌ அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

எனது குழந்தைகள்    ஆரம்பப் பள்ளியில் பயிலும் போது  விடுமுறையன்று லைப்ரரிக்கு அழைத்துச் செல்வேன். குட்டிக் கதைப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினேன்.

அந்தக் கதைகளை எனக்கும்  கூறுமாறு  ஊக்குவிப்பேன். உணவு ஊட்டும் போது தினமும் புதிதுபுதிதாக‌ கதைகள்  கூறி படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறேன்.

இது இப்படியே இருக்கட்டும். சமீபத்தில் பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் பேச்சைக் கேட்ட‌ போது எனக்குள்    பழைய‌ நினைவுகள்.   

 அவரது கருத்தை இங்கே பதிய‌ ஆசைப்படுகின்றேன்.

நம் உருவ‌ அழகைக் காட்ட‌ கண்ணாடி இருப்பது போல‌ உள்ளத்தின் அழகைக் காட்ட‌ புத்தகங்கள் தேவை.

நாம் புத்தகங்கள் வாசிப்பதை நம் குழந்தைகள் பார்க்க‌ வேண்டும். சாப்பிடும் போது புத்தகங்கள் பற்றி இயல்பாகப் பேசினால் வாசிப்பு மீது ஆர்வம் உண்டாகும்.

குழந்தையும் குடும்பமும் ஒண்ணா சேர்ந்து வாசிக்கக்கூடிய‌ பழக்கம் ஏற்பட்டால், பிற்காலத்தில் நாம் இல்லாவிட்டாலும் கூட‌, அவர்களுக்கு தங்க‌ளைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள‌, தங்கள் உணர்வுகளைக் கட்டு ப்படுத்திக் கொள்ள‌,  சின்ன‌ வயதில் நீங்க‌ அறிமுகப்படுத்திய‌ புத்தகங்கள் உதவியாக‌ இருக்கும்.

குழந்தைகள்கிட்ட‌ நல்ல‌ குணங்கள் மனசில் பதிஞ்சி வளரணும்னா வீட்டில் அம்மா அப்பா ஒண்ணா உட்கார்ந்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டு வாங்க‌.

ஏனென்றால்,

கூட்டுக்குடும்பம் என்பது ஒரு அழகிய‌ புத்தகம் மாதிரி. அங்கே தாத்தா, பாட்டி, சித்தப்பா, அத்தை இப்படி அனைவரும் தங்களது அனுபவம் என்ற‌ புத்தகத்தை விரித்து குழந்தைகள் அருகில் வரும்போது கொடுத்தனர்.

கூட்டுக்குடும்பத்தில் தன் அழகான‌ அனுபவத்தை அடுத்த‌ தலைமுறைக்கு கொடுக்க‌ முடிந்தது. இப்போ கூட்டுக்குடும்பம் இல்லை.

எனவே, அனுபவங்களின் மொத்த‌ உருவான‌ புத்தகத்தை அந்த‌ இடத்துக்கு கொண்டு வரணும்.

எனவே, இப்போ என்ன‌ பண்ணலாம். புத்தகங்களை வீட்டினுள் கொண்டு வரலாம். ஆக்கபூர்வமான‌ உற்சாகமான‌ அனுபவஞானம் கட்டாயம் வீட்டினுள் வரும். முயற்சி செய்து பாருங்களேன்.



 நன்றி ஜெயந்தஸ்ரீ

நான் சிறு வயதில் படித்து, மனதில் பதிந்த‌ வரிகளைக் கூறிச் செல்கிறேன்.

புத்தகங்கள் அறிவுச்சுரங்கத்தின் திறவுகோல்கள்;  இன்பப்பூங்காவின்  நுழைவாயில்கள். 

No comments:

Post a Comment