Thursday 19 July 2018

போராடுவதே சுவாரஸ்யம்

க‌ஷ்டப்படாமல் உலகத்தில் எதையும் பெற‌ முடியாது. கேட்டதும் எல்லாமே கிடைத்தால் வாழ்க்கையில் என்ன‌ சுவாரஸ்யம் இருக்க‌ முடியும். போராடிப் பெறுவதே பேரின்பம்.

தான் பட்ட‌ கஷ்டம் தன் குழந்தை படக்கூடாது என்று நினைப்பது பாசம். தான் பட்ட‌ கஷ்டம் தன் பிள்ளைக்கு தெரியவே கூடாதென‌ நினைப்பது தவறு.

என் மாமியார் அவங்களுக்கு மணமான‌ புதிதில் பட்ட‌ கஷ்டங்களையும்,  பின் படிபடியாக‌ முன்னேறியதையும் எனக்குத் திருமணமான‌ புதிதில் என்னிடம் கூறினார்.
அது எனக்கு அவர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.

அம்மா அப்பா அவங்க‌ பட்ட‌ கஷ்டங்களைப் பிள்ளைகளிடம் எடுத்துரைக்க‌ வேண்டும்.

கஷ்டங்கள் மன‌ உறுதியைத் தரும் வல்லமை படைத்தவை. 
தங்கம் அடிவாங்கும். வைரம் பட்டை தீட்டப்படும். சிற்பி செதுக்கினால் தான் சிலை உருவாகும். மரம்  வளர‌ பாறையைத் துளைத்து வேர்விடனும்.



ஒரு குட்டிக் கதை

பக்கத்து வீட்டுக்காரங்க‌ இரண்டு பேர் ஆளுக்கொரு மரம் வளர்த்தார்கள். ஒருவர் அளவான‌ நீரூற்றி நிதானமாக‌ வளர்த்து வந்தார்.  மற்றவர்   ஏராளமாக  நீரும் உரமும் போட்டு விரைவாக‌ உயரமாக‌ வளர்க்கலானார்,

ஒரு  நாள் பலத்த‌ காற்றும் மழையும் அடித்தது. உயரமாக‌ வளர்க்கப்பட்ட‌ மரம் வேரோடி சாய்ந்தது.  அளவான‌ நீரூற்றி வளர்க்கப்பட்ட‌ மரமோ புயலையும் எதிர்த்து தாக்குப் பிடித்து நின்றது.

ஆம். உயரமான‌ மரத்துக்கு எல்லாமே தானே கிடைத்தது. அடுத்ததோ நீருக்கான‌ தேடலில்  தன் வேரை மண்ணில் ஆழப் பரப்பி  வலுவாக‌ காலூன்றியது. 

போராட்டங்களுக்கு நடுவில் வாழ்வதே உரமான‌ வாழ்வு.

திகட்டத் திகட்ட‌ எல்லாம் கொடுத்தால் குழந்தைகட்கு தித்திப்பு என்றால் என்னவென்றே தெரியாது.

கேட்டதும் எல்லாமே கிடைப்பதில் என்ன‌ சுவாரஸ்யம் இருக்க‌ முடியும். போராடிப் பெறுவதிலே தான்  பேரின்பம் இருக்கு. இதை குழந்தைகளுக்கு புரிய‌ வைக்க‌ வேண்டியது பெற்றோரின் கடமை.





No comments:

Post a Comment