Friday 20 July 2018

விலைமதிப்பற்ற‌ நேரம்

என் தோழி சுதா  தன் மூன்று வயது குழந்தை அனுவோடு வர‌ நானும் சேர்ந்து கோவிலுக்குச் சென்றோம்.

மாலை ஏழு மணி. நாங்கள் செல்லும் போது
 குழந்தை அனு," அம்மா, நிலா ஏன் என்கூடவே வருதும்மா" என்று மழலையில்  கேட்டாள்.

நானும் சட்டென‌," நிலாவுக்கு அனுக்குட்டியை ரொம்ப‌   பிடிச்சிருக்கு. அதனால் தான் " என்று சிரித்தேன்.

குழந்தை சமாதானம்   அடைந்தாலும் என் தோழி விடவில்லை. குழந்தைக்கு புரியும்வண்ணம் உண்மையான‌ காரணத்தை மிக‌ எளிமையாகக் கூறினாள்.

அப்போது நான் கற்றுக் கொண்டேன். குழந்தைகளின் கேள்விக்கு சரியான‌ பதிலை அளிக்க‌ வேண்டும் என்பதை.



குழந்தை கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்துங்கள். பதில் தெரியலேன்னா கூட‌, குழந்தை உயரத்துக்கு குனிந்து," நாம‌ சேர்ந்து பதிலைத் தேடலாம்'' என்று கூறி குழந்தையோடு குழந்தையாக‌ மாறுங்கள்.

இன்னொரு அம்மாவிடம்    குழந்தை ஒரு செடியைக் காட்டி, கேள்விகளை தொடர்ந்து அடுக்க‌  சிறிது நேரம் பதிலளித்த  பின், " சும்மா தொண‌ தொணன்னு கேள்வி கேட்காதே" ட்யூஷனுக்குப் போ" என்று விரட்டியதையும் கவனித்தேன்.

இன்று குழந்தையின் கேள்விக்கு பதிலளிக்க‌ எரிச்சல்பட்டால் நாளை, வளர்ந்தபின் அதே குழந்தையிடம்," ஏன் லேட்" என்று நீங்கள் கேட்கும் போது," சும்மா  கேள்வி கேட்காதீங்கம்மா" என்று பதில் வரும்.

குழந்தைகட்கு விலையுயர்ந்த‌ பொருளை வாங்கிக் கொடுப்பதை விட‌ முக்கியமானது உங்கள் பொன்னான‌ நேரத்தை அவனோடு செலவிடுவது தான். அதையே குழந்தைகளும் விரும்புவர்.

சாப்பாடு ஊட்டும் போது டிவி காட்டாமல் கதை கூறுங்கள். என் குழந்தைகட்கு தினம் ஒரு கதை கூற‌ வேண்டும்.  ஒருமுறை சொன்ன‌ கதையை மீண்டும் கூற‌ இயலாது. புதிய‌ கதைக்காகவே நான் கதைகள் படிக்க‌ ஆரம்பித்தேன்.

குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். விளையாடுங்கள். அளவளாவுங்கள். அவை தரம் வாய்ந்ததாக‌ இருக்கட்டும். அவையே உங்கள் வாழ்வில் விலை மதிப்பற்றதாக‌ அமையட்டும். 




No comments:

Post a Comment